இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!
டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
நான் 01.10.2010 அன்று இளையாங்குடியிக்கு சென்றுருந்தபோது பேஷ் இமாம் அவர்கள், 'சார், நீங்கள் பல கட்டுரைகள் எழுகிறீர்கள், ஆனால் சமீப காலமாக நமது சமுதாயத்தில் இளம் பெண்கள் வழி தவறிப் போகிறதினை தடுக்க கட்டுரைகள் எழுதுங்கள் என்றார்'. அவர் கூறிய சொற்கள் என் காதுகளில் ரீங்காரம் இட்டபோது உண்மையில் நடந்த நிகழ்ச்சியினை உதாரணமாக வைத்து இந்தக் கட்டுரையினை வடித்துள்ளேன்!
சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது.
ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு மானம் கப்பலேறுவது, அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை.வெள்ளம் தலைக்கு மேல் போன பின்புதான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் செய்திகளில் பரபரப்பான வந்த தகவல் கேரளா மாநிலம் மூணாறில் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளம் ஜோடிகளில் பெண் கழுத்தினை அறுத்து கொலை செய்யப் பட்டு இறந்தது தெரிய வந்ததும், அந்தப் பெண்ணோடு தங்கி இருந்த ஆண் தலை மறைவான செய்தியும் வந்தன.