சட்டக்கலை அறிமுகம்—01
மௌலவி எம். எம்.ஸகி BA (Hons) மதீனா:
அறபு மொழியில் பிக்ஹ் எனும் வார்த்தை ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளுதல் என்று பொருள்படும். அது மறைவானதொரு விடயமாகவோ, வெளிப்படையானதொரு விடயமாகவோ இருக்கலாம். எனினும், சில அறிஞர்கள் நுணக்கமானதொரு விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு மாத்திரமே 'பிக்ஹ்' எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பர். இவ்விரண்டாவது கருத்திலேயே அல்-குர்ஆன் இப்பதத்தைக் கையாண்டுள்ளது.
'பிக்ஹ்' என்ற வார்த்தை பொதுவாக இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டக் கலையைக் குறிக்கின்றது. ஆரம்பத்தில் இஸ்லாமிய வரலாற்றில் இக்கலையானது, ஷரீஅத்தின் ஏனைய கலைகளைப் போலவே தனியானதொரு கலையாக இருக்கவில்லை. இஸ்லாமிய உலகத்தில் கல்வி வளர்ச்சிக்கேற்ப இத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. பிக்ஹ் எனும் வார்த்தைக்குச் சொல்லப்பட்ட வரைவிலக்கணத்தின் மூலம் இக்கலை ஆரம்ப காலத்திலேயே மூன்று வளர்ச்சிக் கட்டங்களைக் கண்டுள்ளதை கவனிக்க முடிகிறது. பரிபாசையில் பிக்ஹ் என்ற சொல்லுக்கு இம்மூன்று கட்டங்களிலும் மூன்று விதமாகவே வரைவிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. அவை வருமாறு:
1. 'பிக்ஹ்' என்பது: பொதுவாக இஸ்லாமிய சட்டங்களை அறிந்து கொள்வதைக் குறிக்கும். இவை இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளுடன், பண்பாட்டியலுடன், அல்லது ஒரு மனிதன் தனது உடலுறுப்புக்களால் செய்கின்ற செயற்பாடுகளுடன் தொடர்பான சட்டங்களாக இருக்கலாம். இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் 'ஷரஃ' எனும் வார்த்தையும் இதே கருத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் தான் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் பிக்ஹ் என்பது 'ஒரு ஆன்மா . தனக்குச் சாதகமான, பாதகமான சட்டங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வதாகும்' என்று கூறுகிறார். இதனடிப்படையில் தான் அகீதா பற்றிச் சுருக்கமாகத் தான் எழுதிய நூலுக்கு 'அல்- பிக்ஹுல் அக்பர்' எனப் பெயரிட்டுள்ளார்.
2. 'பிக்ஹ்' என்பது: அகீதா தவிர்ந்த ஷரீஅத்தின் ஏனைய சட்டங்களை அறிந்து கொள்வதைக் குறிக்கும். இவ்வரைவிலக்கணத்தை கவனிக்கும்போது முதலாவது வரைவிலக்கணத்திற் கூறப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளுடன் தொடர்பான அம்சங்கள் இதிலிருந்து நீக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஆகவே, இக்கால கட்டத்தில் (அகீதா) நம்பிக்கைக் கோட்பாடுகளுடன் தொடர்பான அம்சங்கள் தனியானதொரு கலையாகத் தோற்றம் பெற்றுள்ளது. இக்கலை 'இல்முத் தௌஹீத்', 'இல்முல் கலாம்' 'இல்முல் அகாத்' ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. ஆகவே, இவ் வரைவிலக்கணமானது, அகீதா தவிர்ந்த அனைத்துக் கலைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆகவே, இது உடலுறுப்புக்களின் செயற்பாடுகளுடன் தொடர்பான விதிகளை உள்ளடக்கிக் கொள்வது போலவே பெருமை, பொறாமை, முகத்துதி போன்ற, மனிதன் தன் மனதால் செய்கின்ற செயற்பாடுகளின் சட்டங்களையும் உள்ளடக்கிக் கொள்கிறது. மேலும், பண்பாட்டியலுடன் தொடர்பான விதிகளும் அதில் அடங்குகின்றன.
3. மூன்றாவது கட்டத்தில் மேற்படி வரைவிலக்கணத்திலிருந்து மனித உள்ளங்களால் நிறைவேற்றப்படுகின்ற செயற்பாடுகளுடன் தொடர்பான விதிகளும் பண்பாட்டியலுடன் தொடர்பான சட்டங்களும் நீக்கப்பட்டன. முறையே, இக்கலைகள் 'இல்முத் தஸவ்வுப்' 'இல்முல் அக்லாக்' போன்ற பெயர்களில் தனியாகத் தோற்றம் பெற்று வளர்ச்சி யடைந்துள்ளன. எனவே, இக்கட்டத்தில் 'பிக்ஹ்' என்பது மனிதனுடைய செயற்பாடுகளுடன் தொடர்பான இஸ்லாமிய சட்டங்களை குர்ஆன், ஹதீஸின் ஆதாரங்களின் அடிப்படையிற் தெரிந்து கொள்வதையே குறிக்கும்.
ஆகவே, இறுதியாகக் கூறப்பட்ட வரைவிலக்கணமானது சட்டக் கலை அறிஞர்களதும், பொதுவாக ஏனைய இஸ்லாமிய அறிஞர்களதும் அங்கீகாரத்தைப் பெற்று இன்று வரை நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கூறப்பட்ட வரைவிலக்கணத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் அம்சங்கள் எதுவும் சட்டக்கலை சார்ந்ததன்று. அவை:
¨ அல்லாஹ்வுடைய 'தாத்' 'ஸிபத்துக்கள்' தொடர்பானவை.
¨ பகுத்தறிவு, புலனுணர்வுகள், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பெறப்பட்ட சட்டங்களோ, மனிதன் இயற்றிய சட்டங்களோ இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டக் கலை சார்ந்தவைகளாகா.
¨ இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகள் பற்றிய விடயங்கள்இ முகத்துதிஇ வஞ்சகம்இ பொறாமை போன்ற மனித உள்ளங்களின் செயற்பாடுகள் தொடர்பானவை சட்டக் கலை சார்ந்தவையாகாது.
'கியாஸ்' மற்றும் தனி நபர் அறிவிக்கின்ற ஹதீஸ்கள் சான்றாகுமா இல்லையா போன்ற அலகுகளை ஆய்வு செய்கின்ற கலை 'உஸூலுல் பிக்ஹ்' எனப்படும். எனவே, சட்டக் கலையின் அடிப்படை விதிகள் பற்றிப் பேசுகின்ற இக்கலை சார்ந்த விதிகளும் சட்டக் கலை சார்ந்தவையன்று. ஏனெனில், இவை அடிப்படை விதிகளடங்கிய அலகுகள் பற்றிய சட்டங்களையே விளக்குகின்றன.
¨ ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட அறிவு ஞானம் என்பது ஷரீஅத்தின் சட்டக் கலை சார்ந்த விடயமாகக் கருதப்பட மாட்டாது. ஏனெனில், இவை நேரடியாக வேத வெளிப்பாடான வஹீ மூலம் பெறப்பட்டவைகளே தவிர, குர்ஆன், ஹதீஸை ஆராய்ந்து பெறப்பட்ட சட்டங்களல்ல. அதே நேரம், 'இஜ்திஹாதின்' அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் கூறிய சில சட்டங்கள் காணப்படுகின்றன. இவை சட்டக் கலை சார்ந்தவையா இல்லையா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் தென்படுகின்றன.
¨ தொழுகை, நோன்பு, ஸகாத், வசதியுள்ளோர் ஹஜ் செய்தல் போன்ற அம்சங்கள் இஸ்லாத்தின் கடமைகள் என்பதைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அஃதே, வட்டி, விபச்சாரம், போதைப் பொருட்களைப் பாவித்தல் முதலான அனைத்தும் தடுக்கப்பட்டவை யென்பதைத் தெரிந்து கொள்வது பாமரர்கள் உட்பட முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும். பாமரர்கள் இவற்றைத் தெரிந்து கொள்வது சட்டக் கலை பற்றிய ஞானம் எனக் கருதப்பட மாட்டாது. ஏனெனில், பொதுவாக ஆண்கள், பெண்கள், அறிஞர்கள், பாமரர்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் இதனைத் தெரிந்தே வைத்துள்ளனர். இவர்கள் இதற்காக எந்த வகையான ஆய்வுகளையும் மேற்கொள்ள வில்லையே.
¨ சில அறிஞர்கள் மத்ஹப்களின் சட்டங்களை அவற்றின் வழி நின்று ஆய்வு செய்து தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இவர்களுடைய இந்த ஞானமானது சட்டக்கலை சார்ந்த ஞானமாகக் கருதப்பட மாட்டாது. ஏனெனில், இது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்து பெறப்பட்ட ஞானமல்ல. இதற்கு உதாரணமாக, ஹனபி மத்ஹப் சார்ந்த ஒருவர் தன்மீது வித்ர் தொழுகை கடமை, வுழூ செய்யும்போது தலையில் ¼ பகுதியை மஸ்ஹ் செய்வது கடமை என்பது போன்ற விடயங்களைத் தெரிந்து கொள்வதைக் குறிப்பிடலாம். அதேபோன்று ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த ஒருவர் வுழூவின் போது தலையின் ஒரு சிறு பகுதியை மஸ்ஹு செய்வது கடமை, பெண்களைத் தொடுவது வுழூவை முறித்துவிடும் என்பது போன்ற விடயங்களைத் தெரிந்து கொள்வதை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
¨ ஆகவே, மத்ஹப்களின் அடிப்படையில் ஷரீஆவின் சட்டக்கலையைக் கற்றுக் கொள்வோர் சிலபோது தத்தமது மத்ஹப்கள் கூறும் சட்டங்களை விரிவாகவும், சிலபோது சுருக்கமாகவும் தெரிந்து கொள்வர். இவர்களுடைய இந்த அறிவானது சட்டக் கலை சார்ந்த அறிவாகக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில், இவர்கள் பெற்றுக் கொண்ட மேற்படி சட்டக் கலை அறிவானது ஒரு மத்ஹபின் வழி நின்று பெறப்பட்டதேயன்றிக் குர்ஆன், ஹதீஸின் வழியாகப் பெறப்பட்டதல்ல.
¨ பிக்ஹ் என்ற வார்த்தைக்கு வழங்கப்பட்ட வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ஒரு மத்ஹபின் வழி நின்று சட்டங்களை ஆய்வு செய்கின்ற ஒருவரிடம் இத்துறையின் உட்பிரிவுகள் பற்றி எவ்வளவு ஆழமான, விரிவான ஞானம் இருந்தாலும் அவர் ஷரீஅத்தின் சட்ட மேதை என்று அழைக்கப்படுகின்ற 'பகீஹ்' ஆகக் கருதப்பட மாட்டார். ஆகவே, சட்ட மேதை என்பவரிடம் இரு நிபந்தனைகள் காணப்பட வேண்டும். அவை
1. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்யப் போதிய அறிவுத் திறன் பெற்றவராக இருத்தல்.
2. மேற்படி ஆதாரங்கள் கூறுகின்ற சட்டங்களையே எடுத்துரைப்பவராக இருத்தல்.
ஆனால், அவை கூறுகின்ற சட்டங்களின் உட்பிரிவுகளுடன் தொடர்பான ஆழ்ந்த ஞானம் அவரிடம் காணப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், சில பிரபலமான சட்ட மேதைகள்கூடச் சில விவகாரங்கள் பற்றிய சட்டங்களிற் தலையிடாது மௌனமாக இருந்துள்ளனர். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. அவையாவன,
1. அவை தொடர்பான ஆதாரங்கள் தமக்குக் கிடைக்காமை.
2. கிடைத்த ஆதாரங்கள் அவற்றின் வெளித் தோற்றத்தில் ஒன்றோடொன்று முரண்படுவதுபோன்று தென்பட்டமை. அப்போது அவர்களால் அவற்றிற்கிடையில் உடன்பாடு காண முடியாமல் போயிற்று.
மேலும், மத்ஹப்களைத் தழுவிச் சட்டங்களை ஆய்வு செய்யும் அறிஞர்களின் பார்வையில் 'பிக்ஹ்' என்ற பதம் இரு கருத்துக்களிற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவை வருமாறு:
1. குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள, அல்லது இஜ்மா, கியாஸின் அடிப்படையில் அமைந்த ஷரீஅத் சட்டங்களின் ஒரு பகுதியைத் தெரிந்து வைத்தலாகும். மேலும், மேற்கூறப்பட்ட நான்கு அடிப்படைகளையும் தழுவி அமைக்கப்பட்ட சட்டங்களைத் தெரிந்து கொள்வதும் ஆகும். இச்சட்டங்கள் அவற்றுக்குரிய ஆதாரங்களுடன் அல்லது ஆதாரங்களின்றி எழுதப்பட்டிருப்பினும் சரியே.
இதனடிப்படையில் (அவர்களின் பார்வையில்) சட்டத்துறை அறிஞர் என்பவர் குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்து அதிலிருந்து சட்டங்களை வகுத்தெடுக்கும் ஆற்றல் பெற்றவராக இருக்க வேண்டியதில்லை. இவ்வாறான ஒருவர் சட்டங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அளவு என்ன என்பதில் அவர்கள் மத்தியில் முரண்பாடான கருத்துக்கள் தென்பட்டாலும், உலக வழமையை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்களை அவர் தெரிந்து வைத்திருந்தாற் போதுமானது. ஆகவே தேவைப்படுகின்ற போது அவசியமான சட்டங்களைச் சட்ட நூற்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்ற அளவு ஞானம் ஒருவரிடம் காணப்பட்டால் அவர் சட்டக் கலை அறிஞர் என்று அழைக்கப்படுவார்.
சில நாடுகளில் அல்-குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள்கூட 'பகீஹ்' என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுவர். அவர்களுக்கு அல்-குர்ஆன் வசனங்களுக்குக் கருத்துக்கள்கூடத் தெரியாது.
ஆனால், சட்டக் கலை அறிஞரென்பவர் இத்துறையில் ஆழமான, விரிவான, தெளிவான கண்ணோட்டமுடையவராகவும், விடயங்களைத் தெளிவாக வகுத்து விளங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராகவும் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
2. சட்டத் துறையிற் காணப்படுகின்ற விதிகளும் பிக்ஹ் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.
(தொடரும்)