சனி, 19 நவம்பர், 2011

சட்டக்கலை அறிமுகம்—02

சட்டக்கலை அறிமுகம்—02

معنى كلمة الفقه وتطوره

மௌலவி எம். எம்.ஸகி BA (Hons) மதீனா:

 பிக்ஹ் என்ற வார்த்தை தருகின்ற அதே கருத்திற் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள்.

1. தீன் :

இவ்வார்த்தை பல கருத்துக்களிற் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடத்தில் எமது தலைப்போடு தொடர்பான கருத்துக்களே எமக்கு அவசியமாகின்றது. அறபு மொழியில் இவ்வார்த்தை கீழ்வரும் கருத்துக்களில் கையாளப்பட்டுள்ளது.

கூலி கொடுத்தல்:

இதற்குக் கீழ்க்காணும் அல்-குர்ஆன் வசனம் சான்றாகும்.

مَالِكِ يَوْمِ الدِّينِ
'கூலி கொடுக்கப்படும் நாளின் அதிபதி'(அல்-பாதிஹா: 4) மேலும் அவன் றுகின்றான்..

 أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَدِينُونَ
'நாம் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பின். மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டுக் கூலி வழங்கப்படுவோமா? (அஸ்-ஸாப்பாத்: 53)

வழி :

அல்லாஹ் கூறுகிறான்...

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
'உங்களுக்கு உங்களுடைய வழி; எனக்கு என்னுடைய வழி' (அல்-காபிரூன்: 6)

ஆட்சி செய்யும் அதிகாரம்:

அல்லாஹ் கூறுகின்றான்...

قَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلّهِ

“முஃமின்களே! இவர்களுடைய குழப்பங்கள் முற்றிலும் நீங்கி மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்“[அல்-அன்பால்: 39]

சட்டமியற்றுதல்:

அல்லாஹ் கூறுகிறான், “வேதம் கொடுக்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஹராமாக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும் உண்மை மார்க்கத்தை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறார்களோ, அவர்கள் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்“ [அத்தௌபா: 29] மேலும் அவன் கூறுகிறான்,

شرع لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ

'நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, நபியே நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும் இப்றாஹீமுக்கும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், நீங்கள் அனைவரும் சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்'(அஷ்ஷூறா: 13) இவ்விரு வசனங்களும் தீன் என்பது அல்லாஹ் தனது அடியார்களுக்குப் பொருந்திக் கொண்ட மார்க்கத்தைக் குறிக்கின்றன. பரிபாசையில் தீன் என்பது அல்லாஹ் தனது அடியார்கள் மீது மார்க்கமாக்கிய சட்டங்கள் அனைத்தையும் குறிக்கிறது. அவை அகீதா, பண்பாடு, மனிதனுடைய செயற்பாடுகள் போன்றவற்றுடன் தொடர்பான விதிகள் அனைத்தையும் பொதுவாகவே உள்ளடக்கிக் கொள்கிறது. எனவே. பிக்ஹ் என்ற வார்த்தைக்கு முதலாவதாகக் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணப்படி அவ்விரண்டும் ஒத்த கருத்துள்ள சொற்களாகும்.

2. ஷரஃ :

அறபு மொழியில் இவ்வார்த்தையானது ஏற்படுத்தல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், அல்லாஹ் மனிதன் மீது மாரக்கமாக்கிய விடயங்களை அடையாளப்படுத்துவதற்காக இவ்வார்த்தை அல்-குர்ஆனில் அதே கருதிற்தான் உபயோகிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்..

شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا

'நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான்.'(அஷ்ஷூறா: 13) இஸ்லாமிய ஷரீஅத்தில் இவ்வார்த்தையானது. அல்லாஹ் தனது அடியார்கள் மீது மார்க்கமாக்கிய விடயங்களைக் குறிக்கும். அவை நம்பிக்கைக் கோட்பாடுகள், மனிதன் தனது உடலுறுப்புக்களால் நிறைவேற்றுகின்றன செயற்பாடுகள், பண்பாட்டியல் போன்றவற்றுடன் தொடர்பான அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்கிறது. இவ்வரைவிலக்கணத்தின்படியும், முதலாவதாகக் கூறப்பட்ட வரைவிலக்கணத்தின் அடிப்படையிலும் பிக்ஹ் , தீன், ஷரஃ ஆகிய மூன்று பதங்களும் ஒத்த கருத்தில் பயன்படுத்தப்படுகின்றன; அவற்றில் ஷரஃ , தீன் ஆகிய இரு வார்த்தைகளும் பிற்பட்ட காலச் சட்ட மேதைகளாலும் ஏனைய அறிஞர்களாலும் பொதுவாக மார்க்கம் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

3. ஷரீஅத்இ ஷிர்அத் :

ஷரீஅத் என்ற வார்த்தை அறபு மொழியில் வாசற்படி, நீர்நிலை என்ற பொருட்களில் உபயோகிக்கப்பட்டுள்ளன. ஷிர்அத் என்ற பதத்தின் பொருளும் இவ்வாறுதான். பரிபாசையில் ஷரஃ எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகின்ற அதே கருத்திற்தான் இவ்விரு வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கீழ்க் காணும் வசனங்களும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன. அல்லாஹ் கூறுகிறான்..

ثُمَّ جَعَلْنَاكَ عَلَى شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ

'அதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம்.ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக. அன்றியும், அறியாமல் இருக்கிறார்களே அவர்களின் விருப்பங்களை பின்பற்றாதீர். ' (அல்-ஜாஸியா: 18) மேலும் அல்லாஹ் கூறுகிறான்..

لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا

'உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் மார்க்கத்தையும் வழிமுறையையும் நாம் ஆக்கியுள்ளோம்'. (அல்-மாஇதா: 48)

சமகாலத்தில் ஷரீஅத் எனும் வார்த்தை மனிதனுடைய செயற்பாடுகள் தொடர்பாக அல்லாஹ் மார்க்கமாக்கிய விதிகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. இந்த வகையில், பிற்பட்ட கால அறிஞர்கள் கூறுகின்ற வரைவிலக்கணத்தின் அடிப்படையிலும், பிக்ஹ், ஷரீஅத் ஆகிய இரண்டும் ஒத்த கருத்துள்ள சொற்களாகும். இவ்வார்த்தைகளுக்கு, இவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களுக்குக் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனம் ஆதாரமாக அமைகிறது. அல்லாஹ் கூறுகிறான்..

لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا

'உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் மார்க்கத்தையும் வழிமுறையையும் நாம் ஆக்கியுள்ளோம்'(அல்-மாஇதா: 48)

அல்லாஹ்வினால் இறக்கி வைக்கப்பட்ட வேதங்கள் அனைத்திலும் மனிதனது செயற்பாடுகளுடன் தொடர்பான விதிமுறைகளில் வித்தியாசங்கள் காணப்பட்டன. ஆனால், இறை வேதங்களின் கருப்பொருளாகக் கருதப்படுகின்ற நம்பிக்கைக் கோட்பாடுகளுடன் தொடர்பான விவகாரங்கள் எதிலும் முரண்பாடுகள் இருந்ததில்லை.இந்த நடைமுறையை மையமாகக் கொண்டுதான், செயற்பாட்டு விதிகள் போதிக்கப்படுகின்ற பீடமான சட்டக்கல்லூரி அறபியில் குல்லியதுஷ் ஷரீஆ என்றழைக்கப்படுகிறது.

4. தஷ்ரீஃ :

தஷ்ரீஃ என்ற பதம் அறபு மொழியில் சட்டம் அமைத்தல் என்று பொருள்படும். பரிபாசையில் அடியார்களுடன் தொடர்பான அல்லாஹ்வுடைய வரையறைகளாகும். அவை ஏவல் விலக்கல்களாகவோ, விரும்பியவாறு நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட விடயங்களாகவோ அல்லது காரண காரியங்களாகவோ இருக்கலாம். இவ்விடத்தில் ஒரு முக்கியமான விடயத்தைத் தெரிந்து கொள்வது மிகப் பிரதானமாகும். சட்டமியற்றுகின்ற அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்குமில்லை. அவன் கூறுகிறான்..

إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّ

'ஆட்சி செய்கிற அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை' (அல்-அன்ஆம்:58)

ஆகவே, அல்லாஹ்வுடைய கடமைகள் தொடர்பான விதிகளையோ, மனிதனுடைய உரிமைகள் தோடர்பான சட்டதிட்டங்களையோ அமைப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறுசெய்வது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவும் அவனுடைய தனித்துவத்தைக் குலைப்பதாகவுமே கருதப்படும். ஏனெனில், சட்டமியற்றும் அதிகாரம் என்பது அல்லாஹ்வுடைய தனித்துவங்களில் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான்..

وَلاَ تَقُولُواْ لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَذَا حَلاَلٌ وَهَذَا حَرَامٌ لِّتَفْتَرُواْ عَلَى اللّهِ الْكَذِبَ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللّهِالْكَذِبَ لاَ يُفْلِحُونَ

'உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பது போல இது ஹலாலானது. இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகின்றார்களோ, அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்' (அந்-நஹ்ல்:116) மிக உயர்ந்த மதிப்புக்குரிய இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்குக்கூட சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்படவில்லை. மாறாக, வஹீயின் மூலம் வந்த சட்டங்களைத் தெளிவுபடுத்தும் பொறுப்பும் அதனை எத்திவைக்கின்ற பொறுப்பும் மாத்திரமே அவர் மீதிருந்தது. அல்லாஹ் கூறுகிறான்..

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَه

'தூதரே! உம் இறைவனிடமிருந்து உம் மீது இறக்கி வைக்கப்பட்டதை மக்களுக்கு எடுத்துக் கூறிவிடும். இவ்வாற நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்' (அல்-மாஇதா:67) மேலும், அல்லாஹ் கூறுகிறான்..

َمَا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ إِلاَّ لِتُبَيِّنَ لَهُمُ الَّذِي اخْتَلَفُواْ فِيه

'நபியே, அன்றியும் அவர்கள் எவ்விடயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை இறக்கினோம்'(அந்-நஹ்ல்:64) மேலும், அல்லாஹ் கூறுகிறான்..

وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِم

'நபியே, மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்'(அந்-நஹ்ல்:44) இது அனைத்து முஸ்லிம்களுடையவும் ஏகோபித்த முடிவாகும். அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட வேதங்களில் இவ்விடயத்தில் கருத்து முரண்பாடு ஏதுமில்லை. அல்லாஹ்வின் வேதங்களை ஏற்க மறுப்பவர்கள் மாத்திரமே இதில் முரண்பாடான கருத்துக் கொண்டுள்ளனர். இந்தக் கருத்தை உறுதிப்படுத்தக்கூடிய இன்னும் ஏராளமான ஆதாரங்கள் அல்-குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படுகின்றன.

இன்ஷா அல்லாஹ் தொடரும் ...